Wednesday, February 9, 2011

பிரகாசமான எதிர்காலம் கொண்ட புகைப்பட(போட்டோகிராபி) துறை - 08-02-2011


போட்டோகிராபி என்பது ஒளிப்படக் காட்சியின் சிறந்த அழகிய அம்சமாக பல ஆண்டுகளாக திகழ்கிறது.
இன்றைய நிலையில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பான வருமானத்தை ஈட்டித்தந்து, பலரும் விரும்பக்கூடிய வாழ்வாதாரமாக உள்ளது. போட்டோகிராபர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்றைய மாணவர்கள் பலருக்கும், நாளைய போட்டோகிராபர்கள் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கலாம். எனவே அந்த பணியின் தன்மைகள், வகைகள், அதற்கு வேண்டிய தகுதிகள் மற்றும் படிப்புகள் ஆகிய விவரங்களை தெளிவாக ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

போட்டோகிராபி பணியின் இயல்பு:

ஒரு போட்டோகிராபர், மனிதர்கள், இடங்கள் மற்றும் இதர விஷயங்களை அதற்கான சாதனங்களை கொண்டு படம் பிடிக்கிறார். அவர் வேலை செய்யும் இடம் ஸ்டூடியோ என்று அழைக்கப்படுகிறது. ஒரு போட்டோகிராபருக்கு வெளியில் ஒப்பந்த வேலைகளும் இருக்கலாம். திருமணம் உள்ளிட்ட பலவித வீட்டு விசேஷங்கள், பலவித வர்த்தக நடவடிக்கைகள் சம்பந்தமாக நிறுவனங்களுடனான வர்த்தகப் பணி போன்ற பலவித ஒப்பந்த பணிகளை போட்டோகிராபர் கொண்டிருப்பார்.

தனிப்பட்ட மனிதர்களின் படங்கள்(போர்ட்ரைட்), வர்த்தகரீதியான படங்கள் மற்றும் தொழில்துறை சம்பந்தப்பட்ட படங்கள் உள்ளிட்ட பலவித அம்சங்களில் ஏதேனும் ஒன்றில் போட்டோகிராபர் சிறப்பு தேர்ச்சி பெற்றிருக்கலாம். அது அவரவர்களின் விருப்பத்தை பொருத்தது. போர்ட்ரைட் போட்டோகிராபியில் தனிமனிதர்கள் அல்லது சிறு குழுவினர் படம் பிடிக்கப்படுவர். வர்த்தகரீதியான போட்டோகிராபியில், வணிகப்பொருட்கள் மற்றும் வணிக செயல்பாடுகளை படம் பிடித்தல்(உள்புறம்/வெளிப்புறம்), இயந்திரங்கள் மற்றும் பேஷன் போன்றவற்றை விளம்பரப்படுத்த மற்றும் விற்பனை செய்ய புகைப்படம் எடுப்பவர் இந்தவகை போட்டோகிராபர்.

தொழில்துறை போட்டோகிராபி பணி என்பது, வர்த்தகரீதியான போட்டோகிராபி பணியை ஒத்தது. ஒரு நிறுவனத்தின் மேம்பாடு மற்றும் தயாரிப்பு விற்பனையை அதிகப்படுத்துவதற்காக, அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே படம் பிடிப்பது இந்த வகையை சேர்ந்தது. இந்த வகைகளைத் தவிர பிரஸ்(பத்திரிகை) போட்டோகிராபி என்ற வகையும் உண்டு. இந்த வகை போட்டோகிராபருக்கு ஒரு நிகழ்வு சம்பந்தமாக அதன் தொடர்ச்சியான சம்பவங்களை படம்பிடித்து அதை பதிவுசெய்யும் திறன் இருக்க வேண்டும். வான்வழி போட்டோகிராபி என்பது, விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களிலிருந்து பல பகுதிகளை, செய்தி அல்லது அறிவியல் அல்லது ராணுவ நோக்கங்களுக்காக படம் பிடிப்பதாகும்.

இவைத்தவிர கல்வி போட்டோகிராபி என்றும் ஒரு வகை உள்ளது. வகுப்பறையில் பயன்படுத்துவதற்கான ஒளிப்படக்காட்சி மற்றும் புகைப்பட அம்சங்களை படம் பிடிப்பதே இப்பணியின் தன்மையாகும். அறிவியல் போட்டோகிராபி என்பது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஜர்னல்களுக்கு தேவையான படங்களை எடுப்பதாகும். மேலும் சில போட்டோகிராபர்கள், வணிகம் மற்றும் தொழில்நுட்ப ஜர்னல்களுக்கு எழுதுகிறார்கள், பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் போட்டோகிராபி சம்பந்தமாக கற்பிக்கிறார்கள் மற்றும் போட்டோகிராபி சாதன தயாரிப்பாளர்களுக்கு பிரதிநிதிகளாக செயல்படுகிறார்கள். மேலும் சில போட்டோகிராபர்கள் ப்ரீ-லேன்ஸ் பணியிலும் இருக்கிறார்கள். இவைத்தவிர விளையாட்டு சம்பந்தமான போட்டோகிராபியும் பல ஆண்டுகளாக மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இதில் வருமானமும் அபரிமிதம்.

தகுதிகள்:

ஒருவர் சிறந்த போட்டோகிராபராக திகழ வேண்டுமெனில், அவருக்கு நல்ல கைத்திறனும், கலை நுணுக்கமும் இருக்க வேண்டும். ஒரு காட்சியின் பின்னணி, ஒளி அமைப்பு, அதன் தெளிவு திறன் போன்றவை பற்றி தொலைநோக்கு கொண்டிருக்க வேண்டும். முக்கியமாக சிறந்த கற்பனைத் திறன் இருக்க வேண்டும். இந்த தகுதிகள் அனைத்துவிதமான போட்டோகிராபி தொழிலுக்குமே முக்கியம். போர்ட்ரைட் போட்டோகிராபி துறையில் இருப்பவருக்கு மனிதர்களை இனிமையாக பேசி கவரும் திறனும் இருக்க வேண்டும்.

பிரஸ் போட்டோகிராபி துறையில் இருப்பவருக்கு நீண்ட நேரம் தொடர்ச்சியாக(சமயத்தில் எதையும் உண்ணாமல்) மற்றும் எந்த நேரத்திலும், எந்தவிதமான பருவ நிலையிலும் வேலை செய்வதற்கான உடல்திறனும், ஆரோக்கியமும் முக்கியம். மேலும் படம்பிடிப்பதற்கு முன்பாக, அது சம்பந்தப்பட்ட செய்தியின் முக்கியத்துவத்தையும் தானாக அறிந்துகொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும்.

டிஜிட்டல் போட்டோகிராபி:

இன்றைய நாட்களில் டிஜிட்டல் போட்டோகிராபி மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக திகழ்கிறது. நீங்கள் சிறந்த டிஜிட்டல் போட்டோகிராபர் ஆவதற்கு, முதலில் ஒரு நல்ல தரமான டிஜிட்டல் கேமரா இருக்க வேண்டும். டிஜிட்டல் கேமராவில் பல தொழில்நுட்ப வசதிகள் இருப்பதால் ஒரே நேரத்தில் பல படங்களை பல கோணங்களில் எடுக்க முடிகிறது. இதன் கொள்ளளவு அபரிமிதமாகவும், மெமரி ஸ்லாட் வசதியும் இருப்பதால் இந்தவகை கேமராக்கள் போட்டோகிராபி தொழிலுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே திகழ்கிறது.

சம்பளம் - ஒரு உதவியாளராக நீங்கள் மாதம் ரூ.8000 முதல் 10000 வரை சம்பாதிக்கலாம். அனுபவம் பெற்றபிறகு, மாதம் ரூ.15000 முதல் 20000 வரை சம்பாதிக்கலாம்.

பேஷன் போட்டோகிராபி:

பேஷன் தொழிலில் பயன்படுவதுதான் இந்தவகை போட்டோகிராபி. ஆடை, நகை உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் புதிய வடிவமைப்பை அழகுபட படம் எடுத்து, அதை லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களை ஈர்க்கும் மிகப்பெரிய சவால் இந்தவகை போட்டோகிராபருக்கு உண்டு. இந்த துறையில் அதிகளவு வருமானம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு போட்டோகிராபராக இதில் நுழைவது எளிதல்ல. மாடல் பொருளையும், மாடல் செய்பவரையும் அழகாக, தத்ரூபமாக காட்டக்கூடிய மிகப்பெரிய சவாலும், திறமையும் இந்த துறை போட்டோகிராபருக்கு தேவை.

பேஷன் துறை நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், இதில் திறமைவாய்ந்த போட்டோகிராபருக்கும் நிறைய தேவை உள்ளது. இத்துறையில் நீங்கள் முத்திரை பதித்தால், உலகளவில் புகழ் பெறலாம். அந்த புகழின் மூலம் பேஷன் டிசைனர்கள், தயாரிப்பாளர்கள், மாடலிங் ஏஜென்சிகள், ஸ்டாக் போட்டோகிராபி ஏஜென்சிகள், விளம்பர ஏஜென்சிகள், வெளியீட்டு நிறுவனம் போன்றவைகளில் அதிக சம்பளத்திற்கு பணிபுரியலாம். மேலும் பேஷன் துறையில் ப்ரீ-லேன்சராகவும் பணிபுரியும் வாய்ப்புண்டு.

இத்துறையில் புதிதாக நுழையும்போது ஆரம்ப சம்பளம் ரூ.15000. அதேசமயம் அனுபவம் கூடும்போதும், பணிபுரியும் நிறுவனத்தைப் பொருத்தும் சம்பள விகிதங்கள் அதிகளவில் மாறுபடும். இதைத்தவிர நீங்கள் இந்த துறையில் எந்தளவு திறமையானவர் என்று பெயர் பெறுகிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் சம்பளமும் அதிகரிக்கும்.

போட்டோகிராபி சம்பந்தமான படிப்புகள்:

போட்டோகிராபி சம்பந்தமான படிப்புகளானது, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் என்று பல நிலைகளில் பலவித கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. அப்படிப்புகளில் சேர பலவித தகுதி வரையறைகளும் உள்ளன.

போட்டோகிராபி சம்பந்தமான படிப்புகளை நடத்தும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் - பாண்டிச்சேரி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் - திருப்பதி

அகடெமி பார் போட்டோகிராபிக் எக்ஸலன்ஸ் - டெல்லி

ரபீந்திர பாரதி பல்கலைக்கழகம் - கல்கத்தா

அலகாபாத் பல்கலைக்கழகம் - உத்திர பிரதேசம்

டெல்லி பல்கலைக்கழகம் - டெல்லி

தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் - உத்திர பிரதேசம்

குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் - அமிர்தசரஸ்

இந்தியா இன்டர்நேஷனல் போட்டோகிராபிக் கவுன்சில் - டெல்லி

ஜே.ஜே. ஸ்கூல் ஆப் ஆர்ட் - மும்பை

ஜாமியா மிலியா இஸ்லாமியா - டெல்லி

ஜவஹர்லால் நேரு டெக்னாலஜிகல் பல்கலைக்கழகம் - ஐதராபாத்

1 comment:

  1. If you outsource, the 3D printing service value increases based precision machining mostly on model complexity and measurement, post-processing, staff experience, high quality prints, and branding. The half volume determines the quantity of fabric which also indicates the printing technology. Although 3D printing has many benefits for mass manufacturing, the big half volume would require giant number of|numerous|a lot of} materials and an extended printing time.

    ReplyDelete