Sunday, February 20, 2011

வாழும் வரை நல்லது செய்ய வேண்டும்

http://img.dinamalar.com/data/large/large_191220.jpg
"வாழும் வரை நல்லது செய்ய வேண்டும்!' ஏழை மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ராசிகேசவன்: அறிவியல் பட்டதாரியான நான், தூத்துக்குடியில் உள்ள ஆக்சிஜன் தயாரிக்கும் கம்பெனியில், பிளான்ட் மேலாளராக பணியாற்றினேன். ஆக்சிஜன்
நிரப்பப்பட்ட சிலிண்டர்களின் அழுத்தத்தை பரிசோதித்த போது, வெடிவிபத்து ஏற்பட்டு, என் கண் பார்வை பறிபோனது. நான் வேலை பார்த்த அதே நிறுவனத்தில் பணிபுரிந்த மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்தேன். நான் பார்வையுடன் இருந்த போது திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட அவரின் பெற்றோர், பார்வை பறிபோனதால் சம்மதிக்கவில்லை. அவர்களை மீறி, இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின், எங்களுக்கு பல வழிகளில் அவர்கள் தொல்லை கொடுத்தனர். ஒரு கட்டத்தில், உயிருக்கே சவால் என்ற நிலையில் தான், எப்படியும் ஒரு நாள் சாகப் போகிறோம்; பயப்படுவதில் பயனில்லை என எண்ணி, சொந்த ஊரான மேட்டூர் அருகில் உள்ள பொறையூர் கிராமத்திற்கு சென்றுவிட்டோம். இதற்கிடையில், ஒரு விபத்தில், என் மனைவியின் அம்மா இறந்துவிட்டார். மிகவும் பின் தங்கிய கிராமம் அது. அடிப்படை வசதிகள் இல்லை. நாங்கள் இருவரும் பட்டதாரிகள் என்பதால், வருமானத்திற்காக, வசதியான குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தோம். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, ஏழைக் குழந்தைகளுக்கான மையங்களை உருவாக்கினோம். தற்போது, 300 குழந்தைகள் இலவசமாக டியூஷன் படிக்கின்றனர். இலவச டியூஷன் தவிர, கம்ப்யூட்டர் வகுப்பு, ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளைப் பேசுவதற்கான பயிற்சி தருகிறோம். எனக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. விரைவில் அதில், ஆதரவற்றவர்களுக்காக ஒரு இல்லம் ஆரம்பிக்கப் போகிறேன். மற்றவர்களின் வாழ்க்கையை உயர்த்த, என்னால் ஆனதை செய்ய வேண்டும் என்பது தான் என் லட்சியம்.

"பிடிச்சதை செஞ்சா நினைச்சதை அடையலாம்!' பியூட்டி பார்லருக்காக பிசியோதெரபிஸ்ட் வேலையை கைவிட்ட தேவிப்பிரியா: மதுரை மாவட்டம், போடிநாயக்கனூர் என் சொந்த ஊர். வீட்டில் கடைசிப் பெண் நான். டாக்டராகணும் என்பது என் கனவு. பிளஸ் 2வில் 80 சதவீத மார்க் வாங்கியதால், கனவு கலைந்தது. கோவையில், ஒரு தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில், இளநிலை பிசியோதெரபி படித்தேன். பின், திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை நகர்ந்தது. குழந்தைகள் வளர்ந்த பின் கொஞ்சம் நேரம் கிடைத்தது. ஆனால், பிசியோதெரபிஸ்டாக மீண்டும் பணியை தொடர எனக்கு மனமில்லை. பியூட்டி பார்லர் ஆரம்பிப்பதில் ஆர்வம் அதிகமானது. பல கேலிப் பேச்சுகள், பல யோசனைகள் எல்லாவற்றையும் பொறுமையாக எதிர்கொண்டேன். பிடிச்சதை செஞ்சா தான் நினைச்சதை அடையலாம் என்று அனைவருக்கும் பதில் கூறினேன். இப்பவும், பியூட்டி பார்லர்கள் ஏதோ மேல் தட்டு மக்களுக்கானது, கலாசாரத்திற்கு எதிரானது என்ற மனநிலை சிறு நகர மக்களிடம் உள்ளது. இலவச மருத்துவ சிகிச்சை முகாம் போல், இலவச அழகு சிகிச்சை முகாம் நடத்தினேன். பெண்கள் கொஞ்சம் தயங்கினாலும், பின் என் அணுகுமுறையால், நண்பர்களாகி விட்டனர். "ஹெல்த் அண்ட் பியூட்டி கிளினிக்' துவங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான செயல்பாட்டில் இறங்கினேன். கையில் பணம் இல்லை. தன்னம்பிக்கை ஒன்றே மூலதனமாகக் கொண்டு துவங்கினேன். பணம் தவிர்த்த மற்ற திட்டங்களை மனதில் ஓட விடுவேன். என் தீவிர தேடலின் பலனாக, "டிடிட்சியா' முகவரி கிடைத்தது. கிளினிக்கை தொடங்குவதற்கான தொகையும், பயிற்சியும் அவர்கள் வழங்கினர். "ஹெல்த் அண்ட் பியூட்டி கிளினிக்' துவங்கி எட்டு மாதம் தான் ஆகிறது. நல்ல பிரபலம் அடைந்து விட்டேன். மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது.

No comments:

Post a Comment