Showing posts with label விவேகானந்தர். Show all posts
Showing posts with label விவேகானந்தர். Show all posts

Monday, June 21, 2010

புல்லைத் தின்னும் மிருகங்கள்

பக்தி என்பது தூய்மையை அடிப்படையாக கொண்டே எழுகிறது. புறத்தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் மேன்மையான அகத்தூய்மையை மாற்ற முடியாது. அகத்தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீண் எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத்தூய்மை யை அடையலாம்.

எண்ணம், சொல், செயல் இவற்றால் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க வேண்டும். புலால் உண்ணாமல் இருப்பதால் மட்டும், யாரும் தூயவர்களாகி விடமுடியாது. கணவனை இழந்த பெண் அல்லது ஆதரவற்றவர்களை ஏமாற்றுபவனும், பொருளுக்காக எத்தகைய கொடுமைகளையும் செய்பவனும், புல்லை மட்டுமே உண்பவனாக இருந்தாலும் அவன் மிருகமே ஆவான். எவருக்கும் தீங்கு நினைக்காமல் பகைவனும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன், பன்றி மாமிசம் சாப்பிடுபவனாக இருந்தாலும் அவனே பரமயோகியாவான்.

பக்தியை கடைபிடிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியுள்ள மனம்தான் முயற்சி செய்யும் ஆற்றல் பெற்றிருக்கும். எத்தகைய இடர்களையும் விலக்கிக் கொண்டு முன்னேற, அதனால் தான் முடியும். அதே நேரம், அளவுக்கு மீறிய மகிழ்ச்சி கூடாது. அது, நமது ஆழமான சிந்திக்கும் ஆற்றலைக் குலைத்து விடும்.

லட்சியம் இல்லாமல் வாழாதே

இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும்.
என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது.
எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த உலக வாழ்க்கை முடிவடைவதற்கு முன்னால், மனிதப்பிறவியினால் பெறுவதற்கரிய பெரிய நன்மையை அடையுங்கள். லட்சியத்தை அடையும் வரையில் நில்லாமல் முன்னேறிச் செல்லுங்கள்.
உயர்ந்த லட்சியம் கொண்ட மனிதன் ஒருவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் ஒன்றுமில்லாமல் வாழ்பவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக சொல்வேன்.
மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி, இகழ்ந்தாலும் சரி, கடவுள் உனக்கு அருள் புரியட்டும், அல்லது புரியாமல் போகட்டும். உன் உடல் இன்றைக்கே வீழ்ந்து போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையிலிருந்து மட்டும் அணுவளவேனும் பிறழ்ந்து செல்லாமல் இருப்பதில் கவனமாக இரு.
மனிதன் எந்த அளவுக்கு உயர்ந்தவன் ஆகிறானோ, அந்த அளவுக்கு அவன் கடுமையான சோதனைகளை கடந்தாக வேண்டும்.

உழைக்கும்போதே உயிர் பிரியட்டும்

  • தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
  • மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இருதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது. நான் உங்களை எல்லாம் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் பிறருக்காக உழைத்து உழைத்து அந்தப் பணியில் இறந்து போவதையே நான் விரும்புகிறேன். நீங்கள் அவ்விதம் இறந்து போனால் நான் மிகவும் மகிழ்வேன். எழுந்திருங்கள்! தேச முன்னேற்றம் என்னும் சக்கரத்தை நகர்த்துவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது? இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள். அப்படி இல்லாவிட்டால் இந்த மரம், கல் முதலியவற்றுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
  • உங்களிடமே நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஒரு காலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். அவ்வளவுதான் விஷயம். உங்கள் அனைவரிடமும் எல்லையற்ற ஆற்றல் குடிகொண்டிருக்கிறது. அதனை பயன்படுத்துங்கள்.

வயிற்றுக்கு பிறகு தான் எல்லாம்...

மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின் அடிப்படை லட்சியம். மறு உலகத்தில் இன்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த உலக வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிப்பது அறிவுடைய செயலாகாது. ஒருவன் இங்கேயே, இப்போதே, இன்பத்தைப் பெற வேண்டும். இப்படிப்பட்ட இன்பத்தைத் தரக்கூடிய மதம் எதுவாக இருந்தாலும் அந்த மதம்தான் சமுதாயத்திற்கு ஏற்ற உண்மையான மதமாகும்.

எப்போதெல்லாம் ஒரு மதம் வெற்றி பெறுகிறதோ அப்போதெல்லாம் அந்த மதத்திற்குப் பொருளாதார வலிமை இருக்க வேண்டும். அதைப்போல ஆயிரக்கணக்கான மதப்பிரிவுகள் அதிகாரத்திற்கு வரப் போராடியபடி இருக்கலாம். ஆனால், உண்மையில் பொருளாதாரப் பிரச்னையைத் தீர்க்கக்கூடிய மதம் மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்றும். வயிறுதான் மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அவன் நடந்துசெல்லும்போது வயிறுதான் முதலில் போகிறது. பிறகு அதைத் தொடர்ந்து அவனுடைய தலை போகிறது. இதை நீங்கள் பார்த்ததில்லையா? மனிதனின் தலை முதலில் போகப் பல யுகங்கள் ஆகும்.

உங்களுடைய குழந்தைக் கனவுகள் கலைய ஆரம்பித்து, பொருள்களை உள்ளது உள்ளபடியே நீங்கள் பார்க்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய தலை போய் விடுகிறது (இறந்து போகிறாய்).
ரசாயனமும், இயற்கை விஞ்ஞானமும் எப்படி இந்த பவுதிக உலகம் பற்றிய உண்மைகளைக் கையாள்கின்றனவோ, அதைப்போலவே மதம் அரிய தத்துவ உண்மைகளைக் கையாள்கிறது. ஒருவன் ரசாயனத்தைக் கற்க இயற்கை என்னும் புத்தகத்தை படிக்க வேண்டும். உன்னுடைய மனம், இதயம் ஆகியவைதாம் மதத்தைக் கற்பதற்கு நீ படிக்க வேண்டிய நூல்களாகும்.

நீ தான் அனைவருக்கும் தலைவன்

  •  பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, 'நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்' என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை உடைத்து எறியவும் முடியும்.

  • எந்தச் செயலும் உனக்கு முக்தி தர இயலாது. ஞானம் மட்டுமே அதைத் தர முடியும். ஞானத்தைத் தடுக்க முடியாது. அதை ஏற்பதோ தடுப்பதோ மனத்தால் முடியாது. ஞானம் வரும்போது மனம் அதை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். எனவே, ஞானம் மனத்தின் செயல் அல்ல. மனத்தின் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.

  •  உன் சொந்த இயல்பிற்கு உன்னைத் திரும்பக் கொண்டு வரவே, செயலும், வழிபாடும் அமைந்துள்ளன. உடலை ஆன்மா எனக் கருதுவது முழு மனமயக்கம். உடலுடன் இருக்கும்போதே நாம் முக்தர்களாகலாம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் பொதுவான எதுவும் இல்லை.

  • 'சித்', 'அசித்', 'ஈஸ்வரன்' என்பதற்கு, ஆன்மா, இயற்கை, கடவுள் என்றும், உணர்வுள்ளது, உணர்வற்றது, உணர்வைக் கடந்தது என்றும் ராமானுஜர் மூன்றாகப் பிரிக்கிறார். இதற்கு மாறாக சங்கரர், 'சித்' அதாவது ஆன்மாவும், இறைவனும் ஒன்றே என்கிறார். இறைவனே உண்மை, இறைவனே அறிவு, இறைவனே எல்லையற்றவர்.