லாஸ் ஏஞ்சல்ஸ்: செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேர்ப்பது தமிழனின் பலம். இதற்கு இன்னுமொரு உதாரணம் குணால் ராஜன். ஜஸ்ட் 25 வயதில் ஹாலிவுட்டின் முன்னணி சவுண்ட் என்ஜினியராகக் கலக்குகிறார்.
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர் குணால் ராஜன், 20 வயதில் அமெரிக்காவில் செட்டிலானவர், அடுத்த சில ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள், பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் இணையதள படத் தொடர்கள் என பெரிய சாதனையைச் செய்துள்ளார்.
ஸ்டெப் அப் 1-2-3 எனும் புகழ்பெற்ற பட சீரிஸை இயக்கிய ஜான் எம் சூவின் அடுத்த படம் எல்டிஎக்ஸ் -க்கு குணால்தான் சவுண்ட் டிசைனர். சமீபத்தில்தான் 'ஃபியர் கிளினிக்' வெப்சீரிஸ் ஒன்றுக்கு சவுண்ட் டிசைன் செய்ததற்காக ஹாலிவுட்டில் புகழ் மிக்க 'ஸ்டீரிமி அவார்டு' வாங்கியிருக்கிறார் குணால்.
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பணியாற்றியுள்ளார் குணால். இந்தப் படம்தான் முழுமையான சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம். கஜினி (இந்தி), ப்ளூ படங்களில் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இப்போது மிகப்பெரிய பொறுப்பு ஒன்றையும் ஏற்றுள்ளார். அது ரஜினியின் எந்திரன் படத்துக்கு ரஸூலுடன் இணைந்து ஒலி வடிவமைப்பது.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன், இயக்குநர் லேகா ரத்னகுமார் மூலமாக தொலைபேசியில் பேசினோம். அவர் கூறுகையில், "தியேட்டர்ல படம் பாக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம், தியேட்டரில் ஒலியலைகள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பிரிந்து செல்லும் ஜாலத்தை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
எனக்கு அந்த டெக்னிக்கை முழுசாக தெரிந்து கொள்ள ஆசை வந்தது. ப்ளஸ்டூ முடித்ததும் ஆடியோ சவுண்ட் பற்றிய கோர்ஸை தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில்தான் படித்தேன். அமெரிக்காவில் சவுண்ட் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். சொந்தமாக ஸ்டுடியோவும் இருக்கிறது. பல ஸ்டுடியோக்களுக்காகவும் பணியாற்றுகிறேன்.." என்றவரிடம், எந்திரன் வாய்ப்பு குறித்து கேட்டோம்.
"எந்திரனுக்கு ரஸூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் பண்ணுகிறார். அவரது மும்பை ஸ்டுடியோவில் 40 சதவிகித பணிகளும், இங்கே என்னுடைய ஸ்டுடியோவில் வைத்து 40 சதவிகித பணிகளும் நடக்கின்றன. அதில் என்னுடைய பங்களிப்பும் உண்டு. எந்திரன் ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படம். அதற்கு சவுண்ட் டிசைனிங் மிக முக்கியம். நிச்சயம் மைல்கல்லாக இருக்கும். படத்தின் மிக சிக்கலான காட்சிகளை இங்கு வைத்துதான் சவுண்ட் டிசைன் செய்கிறோம்" என்றார்.
என்னதான் சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்தாலும், அதை துல்லியமாக ஒலிக்கத் தேவையான வசதிகளைக் கொண்டதாக திரையரங்குகள் இருக்க வேண்டும் என்கிறார் குணால்.
"இன்றைய சூழலில் 10 சதவீத திரையரங்குகள் கூட துல்லியமான சவுண்ட் சிஸ்டத்துடன் இல்லாததால், படத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய வேண்டும். அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு 7 பாயிண்டுகளில் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இங்குள்ள தியேட்டர்களில் 4 பாயிண்டுகள் கூட கேட்கவில்லை..." என்றார் குணால்.
என்னதான் ஹாலிவுட் படங்களில் பிஸியாக இருந்தாலும், தமிழ்ப் படங்களிலும் நிறைய சாதிக்க வேண்டும் என்பது குணாலின் ஆசை. இப்போதுதான் சில முன்னணி இயக்குநர்கள் சவுண்ட் டிசைனிங்குக்கும் பெரிய முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளனராம். விரைவில் முக்கியமான இயக்குநர் ஒருவர் படத்துக்கு சவுண்ட் டிசைன் செய்யவிருக்கிறாராம் குணால்
No comments:
Post a Comment