Thursday, November 26, 2020

சகுந்தலாவா ?

 எங்கள் ஏரியாவில் இருக்கும் என் அபிமான சூப்பர் மார்க்கெட்டுக்கு அரிசி வாங்கப் போயிருந்தேன்.

வழக்கமாய் வாங்கும் 5 கிலோ பை இல்லை, 10 கிலோதான் இருந்தது.


‘சரி, லூஸ்ல எடை போட்டுக் கட்டிக் குடு’ என்றேன் அங்கிருந்த சர்வீஸ் பெண்களில் ஒருத்தியிடம்.


‘அஞ்சு கிலோ சைஸ் பை இல்லை. ரெண்டு கிலோவா ரெண்டு பை தரட்டா?’


‘என்னம்மா பை இல்லைங்கிறே’ என்று அலுத்துக் கொண்டு கல்லாப் பெட்டி சிங்காரத்திடம் ‘என்ன சார், பை இல்லைங்கிறாங்க?’ என்றேன்.


‘சாரி சார்’ என்றார் அவரும்.


‘எங்கேயாவது தேடிப் பாரும்மா. சரக்கு வந்த பை ஏதாவது இருக்கும்’ என்றேன் இன்னொரு பெண்ணிடம்.


‘இல்லைங்க சார்’ என்றாள் இருந்த இடத்திலிருந்து நகராமல்.


‘ம்ம்ஹூம்.. நீங்க யாரும் சரியில்லை. சகுந்தலா எங்கே?’ என்றேன். நான் எப்போது போனாலும் டக்கு டக்கென்று கேட்ட உதவியைச் செய்வாள் அந்தப் பெண்.


‘சகுந்தலாவா?’ என்றாள் அதிர்ந்து முதல் பெண்.


‘சகுந்தலாவா?’ என்று இரண்டாவது பெண்ணும் அதிர்ந்தாள்.


‘சார் அவங்க…’ என்று இழுத்தார் கல்லாப் பெட்டி.


‘என்ன சார் வேணும்?’ என்று கேட்டபடி மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சகுந்தலா.

விஷயத்தைச் சொன்னேன்.


டக்கென்று இரண்டு நிமிஷத்தில் எங்கிருந்தோ ஒரு ஹெச். டி. பி. இ ஃபைபர் பையைக் கொண்டு வந்தாள்.


‘பாத்தீங்களா சார். இதான் சகுந்தலா. இந்த மாதிரிப் பொண்களுக்கு டபிள் இன்க்ரிமெண்ட் தந்து என்கரேஜ் பண்ணுங்க சார்’ என்றேன் கல்லாப் பெட்டியிடம்.



(இதுவரை நடந்தது நிஜ சம்பவம். இனி, அதற்கு சிறுகதை வடிவம் தருவதற்காக இரண்டு வரிகள்)

‘நாங்க அவுங்களுக்கு இன்க்ரிமெண்ட் தர்ரதா? அவுங்கதான் சார் ஓனரோட சம்சாரம்’ என்றார் அவர்.




(போதாது, இன்னும் கொஞ்சம் திரில் வேண்டுமா? இன்னும் நான்கு வரிகள்)






‘என்னம்மா, ரெண்டு வருஷமா உன்னைப் பார்த்துகிட்டு இருக்கேன். ஓனரோட சம்சாரம்ன்னு சொன்னதே இல்லையே?’ என்றேன் சகுந்தலாவிடம்.





‘லாஸ்ட் வீக்தான் சார் கல்யாணம் ஆச்சு’ என்றாள்.

No comments:

Post a Comment