Tuesday, January 24, 2012

உடல் எடை குறையனுமா? மனசால நினைக்கனுங்க….!


Weight Loss Tipsமாறிவரும் உணவுப்பழக்கத்தாலும், உடல் உழைப்பு குறைவான பணிச் சூழல் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குண்டான உடலை குறைக்க இன்றைக்கு பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்படாலும், நம்முடைய உடல் மீது அக்கறை கொண்டு அதை குறைக்க வேண்டும் என்று மனதார நினைத்தால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பணம் செலவில்லாமல் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க அழகியல் வல்லுநர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம்.

மனசால நினைக்கனும்

நம்முடைய உடல் எடையை குறைக்கவேண்டுமெனில் உளரீதியாக நினைக்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். அப்பொழுதுதான் நாவை கட்டுப்படுத்தமுடியும். அதை விடுத்து கண்ட நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடையை குறைக்க முயற்சி எடுப்பதில் எந்த பலனும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடை குறைப்பு பயிற்சியை முதலில் நம்மிடம் இருந்தே தொடங்கவேண்டும்.


நமக்கான உணவு எது? 

நம்முடைய உடலுக்கு தகுந்த உணவு எது என்பதை நாம் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும். ருசிக்காக கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பதை விடுத்து சத்தான உணவுகளை, குறைந்த கலோரி உள்ள உணவுகளை உண்ணவேண்டும் அப்பொழுதுதான் உடல் எடை எளிதாக குறையும். பாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரை. 

நார்ச்சத்துள்ள உணவுகள் 

உடல் எடை குறைய முதலில் கவனம் செலுத்தவேண்டியது உணவு. அதுவும் சத்தான ராகி, கோதுமை, ஓட்ஸ் உள்ளிட்ட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். இது உடலுக்கு தேவையான சத்துக்களை நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது பசி தூண்டும் உணர்வையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

தண்ணீர் குடிங்க

உடல் எடையை குறைப்பதில் தண்ணீரின் பங்கு மிக முக்கியமானது. எனவே உணவுக்கு முன்னரே தண்ணீரை குடித்தால் பசி கட்டுப்படும் உணவும் குறைவாக எடுக்கும். இதனால் உடலுக்கு குறைந்த அளவு கலோரியே கிடைக்கும். தண்ணீரானது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். 

மெதுவா சாப்பிடுங்க 

உணவை நன்றாக அரைத்து மென்று உண்பது உடலுக்கு ஏற்றது. ஏனெனில் ஜீரணத்திற்குத் தேவையான என்சைம்கள் நாவில் இருந்துதான் கிடைக்கின்றன. எனவே சத்தான உணவுகளை அள்ளி விழுங்காமல் நன்றாக மென்று அரைத்து உண்பது அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். உடல் எடையும் கட்டுப்படும். 

நொறுக்குத் தீனிக்கு பை 

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் நொறுக்குத் தீனிக்கு பை சொல்வது அவசியட். எனவே குக்கீஸ், சாக்லேட், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்து சுகர் ஃப்ரி சுயிங்கம் மெல்லுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

குறைந்த உப்பு, சர்க்கரைக்கு நோ

தினமும் உபயோகிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்துக்கொள்வது உடலுக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை உடலின் கலோரியை அதிகரிக்கிறதாம். ஜூஸ், மில்க்ஷேக் போன்றவற்றிர்க்கு சர்க்கரை உபயோகிக்காமல் பருகுவது உடல் எடையை குறைக்கும் என்பது நிபுணர்களின் அறிவுரை. அதேபோல் உப்பின் அளவையும் குறைத்தே உபயோகிக்க வேண்டும் என்பது அவர்களின் ஆலோசனையாகும்.

உடற்பயிற்சி தேவை 

உடற்பயிற்சி என்றாலே ஜிம் போய்தான் செய்யவேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிமையான எக்ஸர்சைஸ்களை செய்யலாம். இதனால் உடலில் தேங்கும் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுவதோடு, உடல் நலமும் பாதுகாக்கப்படும். உடல் பருமனால் இருதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்க நடந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்தே செல்லலாம். அதனால் கலோரியும் எரிக்கப்படும், உடலும் சிக் என்று ஆகும்.

புரதம் அவசியம் 

உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என்று சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம். அது உடலின் பலத்தை குறைத்துவிடும். உடலின் திசுக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். முட்டையின் வெள்ளைக்கரு தினமும் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவை தவிர்த்து விடலாம். ஏனெனில் அதில் அதிக அளவு கொழுப்பு சத்து உள்ளது.

No comments:

Post a Comment