Tuesday, January 29, 2013

ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்கிறீர்களா?



மன நல மருத்துவர் பாரதி விஸ்வேஸ்வரன்: ஓ.சி.டி., எனப்பதும், "அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஆர்டர்' என்ற நோய் குறித்து, யாருக்கும் தெரிவதில்லை. அர்த்தமில்லாத சிந்தனைகள், மீண்டும் மீண்டும் தோன்றுவது தான் இதற்கு காரணம். இதில், நான்கு வகை உண்டு. அசுத்தம், அழுக்கு, அருவருப்பு போன்ற எண்ணங்கள் தொந்தரவு செய்தால், அளவுக்கதிகமாக, சுத்தத்தை எதிர்பார்ப்பர். அடிக்கடி குளிப்பது, பொருட்களை பலமுறை கழுவி வைப்பது, பல முறை கை கழுவுவது போன்றவற்றில், அடிக்கடி ஈடுபடுவர். இரண்டாவது, சந்தேகத்தால் வரக் கூடிய குழப்பம்.
ஒரு செயலை செய்தோமா, இல்லையா அல்லது சரியாக செய்தோமா என்ற சந்தேகத்தால், மீண்டும் மீண்டும் செய்வது. இந்தப் பிரச்னை, மாணவர்களை எப்படி பாதிக்கும் என்றால், படித்த முதல் பாடத்தையே, சரியாக படித்தோமா என்ற சந்தேகத்தால், மீண்டும் மீண்டும், படித்துக் கொண்டே இருப்பர் அல்லது பென்சில் டப்பாவை சரி பார்த்து, சரி பார்த்து, ஓய்ந்து போவர். மூன்றாவது, வியாதிகள் பற்றிய சிந்தனை. தலைவலி வந்தால் கூட, அது, "ட்யூமராக' இருக்குமோ அல்லது வேறு வியாதியாக இருக்குமோ என்ற பயம். ஒரு நோயும் இல்லை என்று, டாக்டர் சொன்னால் கூட, டாக்டர்களை மாற்றுவதுமாக இருப்பர். இணைய தளத்தில், அதீத ஆர்வத்தோடு நிறைய படித்து, இன்னும் குழம்பிக் கொள்வர். நான்காவது, வேண்டாத எண்ணத்தில் தொடங்கி, சங்கிலித் தொடர் போல, தொடர்ந்து பல அர்த்தமற்ற சிந்தனைகள் உண்டாவது. இதை, ஞாபக மறதி அல்லது கவனக் குறைவு என, பிறர் புரிந்து கொள்வர். இவர்கள், மூளை அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. மற்ற எல்லா விதத்திலும், சாதாரணமாக இருப்பர். "இவ்வளவு படித்திருக்கிறேன், சம்பாதிக்கிறேன்... நான் என்ன மென்டலா?' என, கோபப்படுவர். இதற்கு, வைத்தியம் உண்டு. அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க, மருந்து தரப்படும். பின், "காக்னிடிவ் பிஹேவியர் தெரபி' என்ற, மனதளவிலான சிகிச்சை தரப்படும். இரண்டையும் தொடர்ந்து செய்யும்போது, நல்ல பலன் தெரியும்.

No comments:

Post a Comment