Wednesday, January 30, 2013

என் முயற்சியை பரீட்சை செய்தேன்



ஒருவரே நடித்து, ஒளிப்பதிவு செய்து இயக்கிய, "ஒன்' ஆங்கில படத்தின், "ஒன் மேன்' ஹீரோ ராஜ்குமார்: சங்ககிரியின் நெடும்பாறைக்காடு கிராமத்தில், விவசாயக் குடும்பத்தை சார்ந்தவன். ஓய்வு நேரங்களில் தாத்தா தெருக்கூத்தும், அப்பா மேடை நாடகமும் நடத்தி வந்தனர். கலைப் பாரம்பரியம் விட்டுப் போகாமல், ஓய்வு நேரங்களில், சினிமா எடுக்க முயற்சித்தேன். விவசாயத்தில் வரும் பணத்தில், ஒரு முழு படச் செலவை சரிக்கட்ட முடியாது. எனவே, தொழில்முறை கலைஞர்களை தவிர்த்து, சொந்த ஊரில் வசிப்பவர்களையே நடிக்க வைத்து, "வெங்காயம்' என்ற திரைப்படம் எடுத்தேன். பேர் சொல்லும் படமாக இருந்தாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. 

என்னை மட்டுமே வைத்து, "ஒன்" என்ற ஆங்கில படமெடுக்க, முக்கிய காரணம் பணம். இருந்தாலும், என் அதிகபட்ச தனிமனித முயற்சியை, பரீட்சித்துப் பார்த்து விட ஆசை. சினிமா என்பது இயக்கம், ஒளிப்பதிவு, நடிப்பு, அலுவலக பணி, லைட் மேன் ஒர்க் என, அனைவரது கூட்டு முயற்சியால் ஆனது. என்னை மட்டுமே வைத்து, அனைத்து சினிமா வேலைகளிலும், அதிகபட்ச தனிமனித முயற்சியை காட்டினேன். ஒளிப்பதிவு முதல் அலுவலக பணி வரை, அனைத்தையும் செய்தேன். ஒரே ஆள் இத்தனை சுமைகளை தாங்கி, ஏன் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. 

படத்தில் வரும் பெண்கள் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களும் நானே நடித்தவை. வணிக ரீதியிலான, அத்தனை, "கலர்புல்' அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, 500 பேர் திரையரங்கில் படம் பார்க்கும் காட்சியில், 500 பேராக நானே நடித்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரத்திற்கும், மற்றொரு பாத்திரத்திற்கும், லேசான முகச் சாயல் இருக்குமே தவிர, வேறெந்த ஒற்றுமையும் இருக்காது. ஜாக்கிசான், "சைனீஸ் ஸோடியாக்' படத்தில், 15 துறைகளில் ஈடுபட்டார், என்பதே உலக சாதனை. ஆனால், நான் மட்டுமே அனைத்து துறைகளுக்கான வேலை செய்து, எப்படி, "ஒன்' என்ற ஆங்கில படத்தை, தயாரித்து எடுத்தேன் என்பதையும், கேமராவில் பதிவு செய்திருக்கிறேன்.

No comments:

Post a Comment