Sunday, July 4, 2010
தடம் மாறும் இளம் ரத்தம்!
பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. வளர்ப்பும், சூழ்நிலையும்தான் அவர்களை நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றுகிறது. அதுவே அவர்களது வாழ்க்கையின் அடையாளமாகவும் மாறி விடுகிறது.
இளம் ரத்தம் பயமறியாது என்பார்கள்.உண்மை தான். சில குழந்தைகள் செய்யும் செயல்கள் கிரிமினல் குற்றவாளிகளையே அதிர வைத்து விடுகின்றன. அந்தளவுக்கு ‘பிளான் பண்ணி’ கொலை செய்யத் துணிகின்றனர். செல்போன் வாங்க ஆசைப்பட்டு, சக மாணவனை கடத்தி பணம் கேட்டதும், கொடுக்க மறுத்ததால் அவனை கொன்று கூறு போட்டதும் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் நடந்த பயங்கரம்.
அது, இது என்று எந்த வரையரையும் இல்லாமல் கைதேர்ந்தவர்கள் செய்யும் எல்லாவிதமான குற்றங்களிலும் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 14 வயது வரை குழந்தைகள் என்று சொல்லும் அதே சட்டம் தான், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் தவறிழைக்கும்போது இளம் குற்றவாளிகள் என்கிறது. அதேநேரத்தில் இவர்களை மிகவும் கவனத்துடன் பார்க்கிறது. மற்றவர்கள் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டால் சிறைத் தண்டனை, மரண தண்டனை என்கிறது சட்டம். 18 வயதிற்குட்பட்டவர்களை விவரம் அறியாத பருவத்தினராக கருதி, சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறது.
சீர்திருத்த இல்லங்களில் அவர்களின் நிலைமையை ஆராய்வதற்கு முன்பே சமூகம் ஒதுக்கும் குற்றவாளிகளாக அவர்கள் மாறி விடுகின்றனர்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களில் 2 சதவீதம் இளம் குற்றவாளிகள் செய்பவை. இந்த குற்றங்கள் இரண்டு வகையாக நடக்கின்றன. ஒன்று சம்பந்தப்பட்ட குற்றவாளியின் விருப்பம்,தேவையின் அடிப்படையில் நடைபெறுபவை. மற்றவை சமூக விரோதிகள் அல்லது குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில் நடைபெறுவவை. Ô‘எப்படியிருந்தாலும் அதற்கு சூழ்நிலைகளும், குடும்பமும் முக்கிய காரணம். எனவே இளம் குற்றவாளிகளின் குற்றங்களுக்கு பின்னால் மற்றவர்களின் செயல்பாடுகளும், தூண்டுதலும்தான் இருக்கின்றன’’ என்கிறார் மனநல ஆலோசகர் ஆர்.மாலினி.
குறிப்பாக இளம் குற்றவாளிகள் உருவாவதில் குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் அதிக பங்கு வகிக்கின்றனர். இது சமூக விரோதிகளின் தாக்கத்தை விட பல மடங்கு அதிகம் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல். அதே நேரத்தில் குடும்ப பொருளாதாரமும் குற்றம் நடப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
குடும்பத்தால் குலையும் குழந்தைகள்
குழந்தைகள் மன ஓட்டத்தை ஆராய்ந்து வரும் மனநல நிபுணர்கள் சொல்வதென்ன?
பிள்ளைகள் தங்கள் பழக்க, வழக்கங்களை பெற்றோரையும், உறவினர்களையும் பார்த்துதான் கற்றுக் கொள்கின்றனர். இதில் முதலிடத்தில் இருப்பது குடிப் பழக்கத்திற்கு ஆளான பெற்றோர். பலர், தங்கள் குழந்தையின் எதிரிலேயே சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களை செய்கின்றனர். அதை பார்க்கும் பிள்ளைகள், குடிப்பதும், பிடிப்பதும் தவறில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இன்னும் சிலர், பிள்ளைகளிடமே வாங்கி வரச் சொல்கின்றனர். ஏன், எதற்கு என்று கேள்விகள் நிரம்பிய பிள்ளைகள், சுவைத்தும் பார்த்து விடுகின்றன. தொட்டக்குறை, விட்டக்குறையாக இருக்கும் இந்தப் பழக்கம் மெல்ல தொடர்கதையாகி விடுகிறது. முதலில் மிச்சம், மீதி, பிறகு முழுவதுமாக நண்பர்களுடன் களத்தில் இறங்குவார்கள். காசுக்கு வீட்டில் கை வைப்பார்கள். பிறகு வெளியில். முடிவில் போதையுடன், கிரிமினல்கள் என்று பட்டம்.
இப்படி கெடுப்பவர்களின் பட்டியலில் பெற்றோர்கள் மட்டுமல்ல, உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இருக்கிறார்கள். எனவே பிள்ளைகள் யாருடன் பழகினாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
வீட்டில் பிள்ளைகளுடன் பேச ஆள் இல்லாவிட்டால், பல்வேறு சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்து விடும். அப்போது சிக்குபவர்கள் காட்டும் தவறான வழியில் போய் பிள்ளைகள் சின்னாபின்னமாகி விடும். எனவே குழந்தைகளின் தேவைகளை சரியாக பூர்த்தி செய்வதுடன், நல்வழி காட்டும் கதைகளையும், போதனைகளையும் சொல்லித் தருவது நல்லது. குறிப்பாக தவறான வழியில் போனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் எடுத்து சொல்வது மிக முக்கியம். இதற்கு வீட்டில் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் இருப்பது நல்லது என்கின்றனர்.
குற்றவாளிகளில் பெண்கள்...
தேசிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகள் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரித்துள்ளது. அதே போல் சிறுமிகளின் எண்ணிக்கையும் 3 மடங்கு குறைந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள சிறுவர், சிறுமிகள் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.
சிகரெட்
அட்டையில் சீட்டாட்டம்
சிகரெட் அட்டைகளை சேகரித்து அதில் சீட்டு ஆடினாலே சூதாட்டம் என்று சீறுவது அந்தக் காலம். இந்த நாகரீக காலத்தில் சீட்டாட்டம் இன்டோர் கேம் ஆகிவிட்டது. பணக்கார வீடுகளில் மட்டுமல்ல, நடுத்தர குடும்பங்களிலும் சீட்டு விளையாட்டு Ôஜஸ்ட் ஃபன்Õ. அதனால் ஏற்படும் விளைவுகள் சீரியஸானது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சம்பவம். சீட்டாட்டத்தில் தோற்ற சிறுமியை உடைகளை கழற்றச் சொல்லி சக சிறுவர்கள் கட்டாயப்படுத்தினர். அவமானத்தில் துடித்த சிறுமி கடைசியில் தூக்கில் தொங்கிளாள். தூண்டிய குற்றத்திற்காக சக நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வயது 18க்குள். மிக முக்கியான விஷயம், இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இளம் குற்றவாளிகள்... இவ்வளவு குற்றங்கள்...
திருட்டுக் குற்றங்களில்தான் அதிக அளவில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுகின்றனர். 80 சதவீத திருட்டுக்கள் மற்றவர்களின் தூண்டுதலின் பேரில், மற்றவர்களுக்கு துணை நின்றதால் நடந்தவை. 2007 ஆண்டு மட்டும் நாடு முழுவதும் 5606 திருட்டுக்கள் இளம் குற்றவாளிகள் மூலம் நடைபெற்றுள்ளன. இன்னொரு அதிர்ச்சி தகவல்... 2007ம் ஆண்டு மட்டும் 672 கொலைகள் நடந்துள்ளன. இதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதல் இடம். அதாவது 141 கொலைகள். அடுத்து மத்திய பிரதேசம். தமிழ்நாட்டிற்கு 10வது இடம். 28 கொலைகள் தான். 746 கற்பழிப்புகளுக்கு துணை போயுள்ளனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தில் ஈடுபட்டதாக 1400 சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதர சட்டங்களில்...
ஆயுதங்கள், போதைப் பொருள், சூதாட்டம், சாராயம் விற்பனை என 22க்கும் அதிகமான குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்குகளில் எல்லாம் இளம் குற்றவாளிகள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதனை சட்டமும் கவனிக்கிறது.
2007ம் ஆண்டில் நடந்த இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்களை விட 2008ம் ஆண்டு குறைவான சம்பவங்களே நடந்துள்ளன. அதாவது 2007ம் ஆண்டில் இதர சட்டங்களின் கீழ் 4163 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது 2008ம் ஆண்டில் 3156 ஆக குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் அதிகரிக்கும் இளம் குற்றங்கள்
நாகரீகத்திலும், குடும்ப உறவுகளிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் இளம் குற்றவாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் செய்த குற்றங்கள் விவரம்:
தெருவோரம் உருவாகும்...
இளம் குற்றவாளிகள் பட்டியலில் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகள் தான் முதலிடத்தை பிடிக்கின்றனர். தெருவோரத்தில் வசிப்பவர்கள் என்று சொன்னாலும், தங்குவது ரயில், பேருந்து நிலையங்களில்தான். வறுமையின் பிடியில் இருப்பவர்கள் முதலில் பிச்சை எடுப்பார்கள். பின்னர் மற்றவர்களுடன் கூட்டு சேருவர்கள். அப்பாவிகளை மிரட்டி காசை பறிப்பார்கள். மறுத்தால் அடி உதையில் இறங்குவர். பிக்பாக்கெட், செயின் பறிப்பு என்று உள்ளூர் திருட்டுகளில் தேறிய பின்னர் இளம் குற்றவாளிகள் பட்டியலில் சேருவர்கள். இல்லாவிட்டாலும் Ôமாசக் கடைசி கேஸ்’ பிடிக்கும் போலீசார் புண்ணியத்தில் கேடிகள் லிஸ்டில் வந்து விடுவார்கள். சமூக விரோதிகள் பழக்க்கம் கிடைத்ததும் இளம் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பதவி உயர்வு பெற்று பெரும் குற்றவாளிகள் ஆவார்கள். பல சமூக விரோதிகள், சின்ன பையன்கள் என்றால் சந்தேகம் வராது என்பதால், குற்றச் செயல்களிலும், துப்பு கொடுக்கவும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சென்னை, மதுரை போன்ற நகரங்களில் அதிக அளவில் நடக்கிறது.
நேர்மையை வெல்லும் வறுமை
இளம் குற்றவாளிகள் அதிகரிக்க, இல்லாமை எனும் வறுமை முக்கிய பங்கு வகிக்கிறது. அன்றாடத் தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத குடும்பங்களில் பிள்ளைகளை கவனிக்க நேரமிருப்பதில்லை. எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற நிலை, அவர்களை கண்டும் காணாமல் இருக்க வைத்து விடுகிறது. அதனால் வறுமை அவர்களின் நேர்மையை வென்று விடுகிறது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வு அறிக்கை இப்படி பட்டியல் போடுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2008ம் ஆண்டு பதிவுகளின் படி இளம் குற்றவாளிகளில் 62.2 சதவீதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூ.25,000 வரை உள்ளவர்கள். அதேபோல் ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை வருமான உள்ள குடும்பங்களை சேர்ந்த இளம் குற்றவாளிகள் 13.6 சதவீதம். எஞ்சிய 24.2 சதவீதத்தினர் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருவாய் உள்ளவர்கள்.
தமிழகத்தில்...
தமிழகத்திலும் இளம் குற்றவாளிகளால் அரங்கேறிய குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2006 முதல் 2008 வரையில் பதிவான குற்ற விவரங்களை மாநில குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டின் குற்றங்கள் தொகுக்கப்பட்டு வருகின்றன.
குற்றம் 2006 2007 2008
கொலை 23 38 26
கொலை முயற்சி 18 17 17
கற்பழிப்பு 8 13 7
கடத்தல் 0 4 3
பெண் கடத்தல் 0 2 3
வீடு புகுந்து திருட்டு 1 14 3
வழிப்பறித் திருட்டு 6 1 13
கொள்ளை 119 138 106
திருட்டு 304 387 410
ஆட்டோ திருட்டு 44 56 56
வன்முறை 6 26 23
அடிதடி 41 42 158
மானபங்கம் 5 2 5
பாலியல் தொந்தரவு 5 0 0
அலட்சியம் காரணமாக
ஏற்படுத்திய உயிரிழப்பு 78 0 6
மற்ற குற்றங்கள் 29 65 75
மொத்தம் 687 805 911
செக்சிலும் குற்றம்...
விவரம் அறியாத சிறுவர், சிறுமியர்களை வீட்டில் வைத்துக் கொண்டு பாலுறவில் ஈடுபடும் பெற்றோர்கள், உறவினர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைதானே என்று அலட்சியத்துடன் அவர்கள் செய்யும் செயல்கள் குழந்தைகளின் மனதை கெடுப்பதுடன், வளர்இளம் பருவத்திலேயே அது குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சிகரெட், மது போல் அதையும் முயற்சித்து பார்ப்பதால், குற்றவாளியாக மாறி விடுகின்றனர். அது வெளியில் தெரியவரும் போது இரு தரப்பையும் பாதிக்கிறது. 2008ம் ஆண்டு தகவல் இது. நாட்டில் 30&50 லட்சம் சிறுவர், சிறுமிகள் கட்டாயத்தின் பேரில் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment