Sunday, July 4, 2010

நல்லவர்களுடன் சேருங்கள்


தான் சேர்ந்திருக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப மணம், சுவை, நிறம் ஆகிய தன்மைகளை தண்ணீர் பெறுகிறது. அசுத்த நீருடன் சேரும்போது, அது அசுத்தமாகிறது. அதேபோல, உடன் பழகுபவர்களின் தன்மைக்கேற்பவே குணங்களும் அமையும். தீயவர்களுடன் சேர்வதால் தீமை உண்டாகுமே தவிர, வேறு நன்மைகள் ஏதும் ஏற்படாது. நல்ல குணமுடையவர்கள், தீயோர்களுடன் நட்பு கொள்ளாமல் விலகியே இருப்பர்.


ஒருவனுக்கு அமையும் நட்பைப் பொறுத்தே, அவனுக்கு அறிவும், நடத்தைகளும் அமைகிறது. நல்லவர்களுடன் சேர்வதால் மனம் சுத்தமாகவும், செயல்கள் நல்லதாகவும் இருக்கும். ஒருவன் தான் செய்த நற்செயல்களால் மட்டுமே இறந்த பின்பும் புகழ்பெற்றிருக்க முடியும். அப்படிபட்ட செயல்கள் பெற நல்ல குணமும், நல்லோர்களின் நட்பும் அவசியம் வேண்டும்.




ஒழுக்கத்துடன் வாழ்வதற்கு நல்லவர் சேர்க்கையை விட, வேறு எதுவும் உதவி செய்யாது. அதேபோல், தீயவழியில் ஈடுபட்டு வீணாக வாழ்ந்து துன்பத்தில் வீழ்வதற்கு, தீயவர் சேர்க்கையைவிட வேறு எதுவும் துணையாக இருக்காது.


ஒரு செயலை செய்யும் முன், அதற்கு வரும் இடையூறுகள், விளையும் பயன், தேவையான பொருள், கருவி, காலம், ஆற்றல், இடம் போன்றவற்றை நன்கு சிந்தித்துவிட்டு அதில் இறங்க வேண்டும். இந்த குணங்கள் நல்ல நண்பர்களின் நட்பினாலேயே வரும். செயலை செய்யத் தொடங்கியவுடன் பார்த்துக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனம்.

No comments:

Post a Comment