Sunday, July 4, 2010
படிக்காதவர்களுக்கு கண் எதற்கு?
* உள்ளத்தில் இருக்கும் குற்றங்கள் நீங்கவும், அறவழியில் நடக்கவும் வாய்மையை வலியுறுத்தும் அறநூல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல் அதன்படி நடக்கவும் வேண்டும். அறவழியில் நடப்பவர்களின் மனம் தூய்மையாக இருக்கும். தூயவர்களுக்கு அனைத்துமே சொந்தமானதாகும்.
* மனிதர்கள் அனைவருக்கும் கண்கள் இருக்கிறது. அதனைக் கொண்டு புறப்பொருளை பார்க்கிறார்கள். இதற்காக கண் உள்ளவர்கள் அனைவரும் பார்வையுடையவர்கள் என்று கருதக்கூடாது. கல்வியை சரியான முறையில் கற்று, அதற்கேற்ப தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவரே உண்மையில் கண் உள்ளவர் ஆவார். கல்லாதவர்களுக்கு இருக்கும் கண்கள், புண்களாகவே கருதப்படும். அந்த புண்களுக்கு வலியை மட்டும்தான் உணரமுடியுமே தவிர எதனையும் படித்தறியும் திறன் இருக்காது.
* நிலத்தில் எவ்வளவு ஆழம் தோண்டுகிறீர்களோ அந்த அளவிற்கு நீர் சுரக்கும். மக்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியும் இதைப்போலவே அறிவை பெருக்கித்தருமே தவிர, சற்றேனும் குறைவாக கொடுக்காது. எனவே, அனைவரும் கற்றுத்தேர வேண்டும்.
* கற்றவர்கள் நற்குணங்கள் உடையவர்களாக இருப்பார்கள். தம்மைவிட மூத்தோருக்கும், குருவிற்கும் பணிந்து நடப்பார்கள். தம்முடன் நீண்டநாள் பழகிய நல்ல நண்பர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் விலகி செல்லும்போது வருத்தம் கொள்வார்கள். இவர்களே, அனைவரிலும் உயர்ந்தவராக கருதப்படுவார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment