Thursday, March 10, 2011

சட்டமும் கை கொடுக்கும்!


"சட்டமும் கை கொடுக்கும்!' அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயகுமார்: மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், சட்டப்படிப்பு குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லை. தொழில்நுட்பத் துறை அளவிற்கு, சட்டப் படிப்பில் வேலைவாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு இருக்கும் அளவிற்கு, இந்த துறையில், திறமையான
மாணவர்கள் இல்லை. சரியான ஆட்கள் இல்லாததால், சட்டம் படித்த மாணவர்கள் பார்க்க வேண்டிய வேலை யை, பொறியியல் மாணவர்கள் செய்கின்றனர். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முடிக்கவும், வழக்கு குறித்த குறிப்புகள் மற்றும் ஒரு குற்றத்திற்கு வழங்கப்பட்ட நீதிகள் குறித்த குறிப்புரைகளை தயாரித்துக் கொடுக்க, இந்தியா போன்ற நாடுகளை அவர்கள் நாடுகின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள், ஆன்-லைனிலேயே கிடைக்கின்றன. அதைத் தேடி, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். அதே போல், பீ.பி.ஓ., கால் சென்டர்களிலும், சட்டம் சம்பந்தமான வேலைவாய்ப்புகள் வருகின்றன. விமான நிலையங்கள், துறை முகங்களில் ஏற்றுமதி, இறக்குமதியில் வரி விதிப்பு மற்றும் வரி விலக்கு போன்றவற்றில், வக்கீல்களின் பங்கு முக்கியமானது. பன்னாட்டு விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களிலும், இதே போல் வரிவிதிப்புகள், சட்ட திட்டங்கள் வழக்கத்தில் இருப்பதால், இத்துறையில் தனித்துவம் வாய்ந்த சட்ட மாணவர்கள், வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியம் பெற முடியும். பொறியியல் படிப்பைப் போலவே, சட்டம் படிக்கவும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் உதவித் தொகை உள்ளது. குறிப்பிட்ட துறை அடிப்படையிலான சட்டங்களை தெரிந்து கொள்ள, குறுகியகால சான்றிதழ் படிப்பும் தற்போது உள்ளது. பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, சான்றிதழ் படிப்பாகவும் சில சட்டப் படிப்புகள் உள்ளன. சட்ட படிப்புடன், ஏதேனும் ஒரு துறையில் தனித்தன்மைமிக்கவராக தங்களை வளர்த்துக் கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், சட்டப் படிப்பு, வேலைவாய்ப்பை அள்ளித் தரும்.

No comments:

Post a Comment