"வேலை வாய்ப்புள்ள கல்வியை கற்க வேண்டும். வேலைக்குச் செல்ல வேண்டும். போட்டி போட்டு சம்பாதிக்க வேண்டும்..." என்ற எண்ணம் பெரும்பாலான இளம்பெண்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியானால் பெண்கள் படிப்பதும் வேலைக்குச் செல்வதும் பணத்துக்காக மட்டும் அல்ல.
இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் படித்து வேலைபார்ப்பவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு, பெண் மூலமும் வருவாய் வர வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமல்ல. வேலைக்குச் செல்லும் பெண்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு சமாளிக்கும் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், உலக அனுபவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். வேலை பார்க்கும் பெண்களுக்கு வெளிஉலக அனுபவங்கள் நிறைய கிடைக்கின்றன. அந்த அனுபவங்களும் குடும்பத்திற்கு அவசியம் என்பதால், வேலைக்குச் செல்லும் பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் இந்தியாவில் வேலை பார்த்து சம்பாதிக்கும் பெண்கள் 39 சதவீதம் இருப்பதாக "நேஷனல் பேம்லி ஹெல்த் சர்வே" குறிப்பிடுகிறது. இது மிகக் குறைந்த அளவாகவே இருக்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையைப் பற்றி நன்றாக திட்டமிடுகிறார்கள். காலையில் விழிக்கும் நேரத்திலிருந்து அவர்கள் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு அந்தந்த நேரத்தில் செய்து முடிக்கிறார்கள். இதனால் திட்ட மிடுதல், சுறுசுறுப்பாக செயல்படுதல், தனது வேலைகளை முடிக்க நிறைய சிந்தித்தல் ஆகிய மூன்று சிறப்புகள் அவர்களிடம் இணைகின்றன. இவர்களது சிந்தனை செயல் வேகத்திற்கு தக்கபடி உழைக்க உடல் ஒத்துக்கொள்ளவில்லை என்றால், தங்களுக்கு ஆரோக்கிய குறைபாடு இருப்பதை இவர்கள் விரைவாகவே உணர்ந்துகொண்டு அதற்கான சிகிச்சைகளை பெறுகிறார்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொள்வதன் பின்னணியும் இதுதான்.
இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலிருந்து தான் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனால் பயணம், அதில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக மாற்று வழி கண்டுபிடிக்கும் ஆற்றல், பயணத்திற்கான முன்னேற்பாடுகள், நெருக்கடியான நேரத்திலும் தகவல் தொடர்பு கொள்ளும் ஆற்றல் போன்றவை இவர்களிடம் வளர்கிறது.
வேலைக்குப் போகும் பெண்களின் தோற்றப் பொலிவு அருமையாகவே இருக்கிறது. வீட்டிலேயே இருக்கும் பெண்களுக்கு முகம் பார்க்க இரண்டு கண்ணாடிகள் என்றால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இருபது கண்ணாடிகள் இருக்கின்றன. அழகு விஷயமானாலும், உடை விஷயமானாலும், அணிந்துகொள்ளும் நகை விஷயமாக இருந்தாலும் அதில் அவர்கள் புதுமையானவர்களாகவும், "அப் டூ டேட்" ஆகவும் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளும் விஷயத்தில் முன்னோடிகளாக இருப்பதால், அது தொடர்பாக எழும் தன்னம்பிக்கையிலும் அவர்கள் முன்னிலை வகிக்கவே செய்கிறார்கள்.
வேலை பார்க்கும் இடத்தில் பலதரப்பட்ட சக பணியாளர்களோடு பழகுதல், குழுவாக உழைத்தல், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்லுதல், பல்வேறு நெருக்கடிகளில் வரும் பொதுமக்களை சந்தித்தல், உயர் அதிகாரி தன் சமபொறுப்பில் பணியாற்றுகிறவர்கள் தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்கள் ஆகிய ஒவ்வொருவரிடமும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற பக்குவம் போன்றவை வேலை பார்க்கும் பெண்களுக்கு கிடைக்கிறது. இதனால் பலதரப்பட்ட மனிதர்களை புரிந்துகொண்டு அனுசரித்து வாழும் பக்குவத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஒரே கல்வியை கற்றுக்கொள்ளும் இரண்டு பெண்களில் ஒருவர் வேலைக்குச் செல்பவராகவும், இன்னொருவர் வீட்டிலே இருப்பவராகவும் இருந்தால் வீட்டில் இருக்கும் பெண்ணிடம் இருக்கும் அந்த உயர்ந்த கல்வி மெல்ல மெல்ல மங்கிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தன் கல்வித்திறனுக்கு ஏற்ற வேலையைத் தேடிக்கொள்ளும் பெண் படித்த கல்வியை மறக்காமலும், அது தொடர்பான அனுபவக் கல்வியை கூடுதலாக பெறுபவராகவும் இருக்கிறார்.
முன்பெல்லாம் உயர்கல்வி கற்கும் பெண்கள் சொந்த ஊரிலே வேலை கிடைக்க வேண்டும் என்று ஏங்கியதுண்டு. இப்போது மொழிப்புலமையும், கல்விச் சூழலும் அவர்களை வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரியத் தூண்டுகிறது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் பெண்களின் அறிவாற்றல் எல்லை மிகப் பரந்த நிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாய் விமானப் பணிப்பெண் பயிற்சிகளில் சேர்ந்து, பணி ரீதியாக விண்ணில் பறந்து கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த பயிற்சியில் சேர வரும் பெண்களிடம் கேட்டால், "பயணத்திற்காக பறப்பது செலவு. இதையே படித்துவிட்டு பறப்பது பணத்தை மட்டுமல்ல, உலகளாவிய அனுபவங்களையும் ஈட்டித் தருகிறது..." என்று உரக்கச் சொல்கிறார்கள்.
பழைய காலத்தில் கணவர் பணம் சம்பாதித்துக் கொண்டு வருவார். அதை சிக்கனமாக செலவு செய்பவராக மட்டுமே பெண் இருந்தார். இன்று பணம் சம்பாதிக்கும் பெண்கள், அதை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதில் கணவருக்கே (அல்லது குடும்பத்தினருக்கே) ஆலோசனை சொல்பவர்களாக இருக்கிறார்கள். சேமிப்பு மட்டுமல்ல பணத்தை பயனுள்ள வழிகளில் செலவிட கற்றுக்கொடுப்பதிலும் இன்றைய பெண்கள் முன்னோடிதான்.
இப்படி எண்ணற்ற "பிளஸ் பாயிண்ட்"டுகள் இருந்தாலும், வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியப் பெண்களில் 48 சதவீதம்பேர் இப்போதும், "கணவர் விரும்பினால் நான் என் வேலையை விட்டுவிடுவேன்" என்கிறார்கள். "கணவர் சொன்னாலும் வேலையை விடமாட்டேன்" என்று சொல்லும் பெண்கள் 52 சதவீதம் இருந்தாலும் அவர்கள் மனைவி, அம்மா ஆகிய இரு பொறுப்புகளையும் வெகு சிரமமெடுத்து சுமக்கிறார்கள். அந்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர்களில் 94 சதவீதம் பேர் வேலையை விட தயாராக இருப்பதாக சர்வேயில் தெரிவிக்கிறார்கள்.
"நல்ல மனைவி" என்ற பொறுப்புக்கு எந்த விதத்திலும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதில் தென்னிந்திய பெண்கள் மிகக் கவனமாக இருக்கிறார்கள். எவ்வளவு படித்து, உயர்ந்த வேலைக்கு சென்றாலும் என்ன விலை கொடுத்தாவது "நல்ல மனைவி" என்ற பட்டத்தை பெற்றுவிடவேண்டும் என்ற ஆசை அவர்களிடம் இருப்பதை பாராட்டித்தான் ஆக வேண்டும். அவர்கள் நல்ல மனைவி என்ற பட்டத்தை பெற்றுவிட சமையல் அறைக்குள் வந்திருக்கும் புதிய நவீன கருவிகள் நன்றாகவே கை கொடுக்கின்றன. அலுவலகத்தில் ராணியாக இருந்தாலும், வீட்டுக்கு வந்து சமைக்கும்போது "இங்கும் நான் ராணிதான்" என்று மெய்ப்பிக்க வேண்டியிருக்கிறதே!
No comments:
Post a Comment